உக்ரைன் தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) அமர்வில் 'உக்ரைன் மீதான தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்' என்ற தலைப்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் நெருக்கடி தொடர்பான சிறப்பு அவசர அமர்வில், இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 140 வாக்குகளும், தீர்மானத்தை எதிர்த்து ஐந்து வாக்குகளும் செலுத்தப்பட்டன.
அதே நேரத்தில், 38 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தனது தரப்பை நிலைப்பாட்டை முன்வைத்தார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில்,
"இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஏனென்றால் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் இந்த வரைவு தீர்மானத்தில் சரியாக குறிப்பிடப்படவில்லை," என்று அவர் கூறியிருந்தார்.
உக்ரைனில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், அது மேலும் மோசமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு இந்தியா அளித்த உதவியை குறிப்பிட்டுள்ள அவர், அந்நாட்டில் இருந்து 22.50 ஆயிரம் இந்தியர்களை எப்படி வெளியேற்றியது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.