2025 வரை பிசிசிஐ பொறுப்புகளில் தொடர கங்குலி, ஜெய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

2025 வரை பிசிசிஐ பொறுப்புகளில் தொடர கங்குலி, ஜெய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
2025 வரை பிசிசிஐ பொறுப்புகளில் தொடர கங்குலி, ஜெய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

எதிர்வரும் 2025 வரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமைப் பொறுப்புகளில் சவுரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2019 முதல் அவர்கள் இருவரும் பிசிசிஐ பொறுப்பை கவனித்து வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் அவர்களது பதவிக் காலம் நிறைவு பெற உள்ள சூழலில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி அமைப்பான பிசிசிஐ-யை ஒழுங்குபடுத்தும் வகையில் நீதியரசர் ஆர்.எம்.லோத்தா கமிட்டி சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றது. அதன்படி மூன்று ஆண்டுகள் மாநில கிரிக்கெட் சங்கத்திலும், அதற்கடுத்த மூன்று ஆண்டுகள் பிசிசிஐ-லும் என தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் பொறுப்பில் இருப்பவர்கள் கட்டாயம் சில ஆண்டுகள் இடைவேளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு பதவிக்கு திரும்பலாம் என பரிந்துரைத்தது. அது விதியாகவும் செயல்பாட்டில் உள்ளது.

அதனை மாற்றக் கோரிதான் பிசிசிஐ, உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விதிகளை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, மாநில கிரிக்கெட்டில் 6 ஆண்டுகள், பிசிசிஐ-யில் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் ஒரு நபர் பொறுப்பில் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி இப்போது கங்குலி மற்றும் ஜெய் ஷா தங்களது பொறுப்புகளை தொடர்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி பிசிசிஐ-யின் தலைவராகவும், ஜெய் ஷா செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.