இந்தியாவுக்கு எதிரான தொடர் மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட 3 ஆஸி. வீரர்கள் விலகல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் 20-ம் தேதி மொகாலியில் நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் 23-ம் தேதி நாக்பூரிலும், 3-வது ஆட்டம் 25-ம்தேதி ஹைதராபாத்திலும் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், ஆல்ரவுண்டர்களான மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ஸ்டார்க் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், மார்ஷ் மற்றும் ஸ்டாயினிஸ் கணுக்கால் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
இவர்கள் 3 பேருக்கும் ஏற்பட்டுள்ள காயம் சிறிய அளவில்தான் என்ற போதிலும் அடுத்த மாதம் சொந்த நாட்டில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மிட்செல் ஸ்டார்க், மார்ஷ், ஸ்டாயினிஸ் ஆகியோருக்கு பதிலாக நேதன் எலிஸ், டேனியல் சேம்ஸ், சீன் அபோட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னணி வீரர்கள் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.