முன்னிலை பெற்றது இந்தியா பும்ரா அபார பந்துவீச்சு

முன்னிலை பெற்றது இந்தியா பும்ரா அபார பந்துவீச்சு
முன்னிலை பெற்றது இந்தியா பும்ரா அபார பந்துவீச்சு

முன்னிலை பெற்றது இந்தியா பும்ரா அபார பந்துவீச்சு

தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 13 ரன் முன்னிலை பெற்றது.  நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (77.3 ஓவர்). கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 79 ரன் விளாசினார். புஜாரா 43, பன்ட் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 4, ஜான்சென் 3, ஆலிவியர், என்ஜிடி, மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்திருந்தது (8 ஓவர்). மார்க்ரம் 8, மகராஜ் 6 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மார்க்ரம் மேற்கொண்டு ரன் எடுக்காமல் பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானார். மகராஜ் 25 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார்.

ஒரு முனையில் கீகன் பீட்டர்சென் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த... வாண்டெர் டுஸன் 21, பவுமா 28, கைல் வெரெய்ன் 0, மார்கோ ஜான்சென் 7 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த கீகன் பீட்டர்சென் 72 ரன் (166 பந்து, 9 பவுண்டரி) விளாசி பும்ரா வேகத்தில் புஜாரா வசம் பிடிபட்டார். ரபாடா 15, லுங்கி என்ஜிடி 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 210 ரன்னுக்கு சுருண்டது (76.3 ஓவர்). ஆலிவியர் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் பும்ரா 23.3 ஓவரில் 8 மெய்டன் உள்பட 42 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஷமி, உமேஷ் தலா 2, ஷர்துல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 13 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்துள்ளது. ,மயாங்க் 7, ராகுல் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். புஜாரா 9 ரன், கேப்டன் கோஹ்லி 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, 70 ரன் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இன்று 3வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

கோஹ்லி 100: இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சதம் விளாசி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகப் போகிறது. நல்ல பார்மில் இருந்தும் சதமடிக்கும் வாய்ப்பு கை கூடாமல் நழுவிக்கொண்டே இருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அவர் சத்தமில்லாமல் ஒரு சதத்தை பதிவு செய்திருக்கிறார். ஷமி வேகத்தில் தென் ஆப்ரிக்க வீரர் தெம்பா பவுமா கொடுத்த கேட்ச் வாய்ப்பை நேற்று அபாரமாக டைவ் அடித்து பிடித்த கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச் என்ற சாதனை மைல் கல்லை எட்டினார். இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்த வரிசையில் டிராவிட் (163 போட்டியில் 209 கேட்ச்), லக்‌ஷ்மண் (134 போட்டியில் 135 கேட்ச்), சச்சின் (200 போட்டியில் 115 கேட்ச்), கவாஸ்கர் (125 டெஸ்டில் 108 கேட்ச்), அசாருதீன் (99 டெஸ்டில் 105 கேட்ச்) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். கோஹ்லிக்கு இது 99வது டெஸ்ட் போட்டி ஆகும். விரைவில் அவர் 100வது டெஸ்டில் விளையாடி அந்த வகையிலும் ஒரு சதம் அடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.