பாஜகவில் இணைந்தார் குஷ்பு

பாஜகவில் இணைந்தார் குஷ்பு
பாஜகவில் இணைந்தார் குஷ்பு

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்வதாக பாஜகவில் இணைந்த பின் நடிகர் குஷ்பூ தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு கடந்த சில தினங்களாக டிவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதுபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா  மருத்துவமனையில் இருந்தபோது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகை குஷ்பூ, அமித்ஷா நலம்பெற ட்வீட் போட்டால் நான் பாஜகவில் இணையவுள்ளதாக வதந்தியை பரப்புகிறார்கள் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும், பாஜகவில் முக்கிய பொறுப்பு கேட்டு குஷ்பூ காத்திருப்பதாகவும் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கிடையே, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதிவியில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்தது. இதைத் யில் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாம் விலகி கொள்வதாக அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பூ கடிதம் எழுதியுள்ளார்.  


இந்நிலையில், டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய செயலாளர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் நடிகை குஷ்பூ பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். நடிகை குஷ்பூவிற்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து மற்றும் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கி குஷ்பூவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை நடிகை குஷ்பூ சந்திக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பாஜகவில் இணைந்த பிரபலங்களுக்கு தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குஷ்பூவிற்கும் முக்கிய பொறுப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் எனது கடமையை முழுமையாக செய்வேன் என்றும் கூறினார். மேலும், மோடி இந்தியாவை சரியான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என்றும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.