உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் அமர்வு முன் கடும் வாதம் நடந்த நிலையில், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி , கபில் சிபல், வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம். 9 மாவட்டங்களில், வார்டு வரையறை முடியாத காரணத்தினால், அங்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அங்கு 4 மாதங்களில் தொகுதி மறுவரையை முடித்து தேர்தல் நடத்த வேண்டும்" என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால்,நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இம்முறை நடைபெறாது.