விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம் வெளியீடு..!

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம் வெளியீடு..!

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் பாகங்களையும் விழுந்த இடத்தையும் கண்டுபிடித்தது நாசா!! நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தையும், பாகங்களையும் நாசாவின் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. மேலும் நிலவுக்கு தாங்கள் அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து ஜூலை 22 ஆம் தேதி GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும், விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. இந்நிலையில் விக்ரம் -2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதுகண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.