சென்னை புகா்ப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது: குடியிருப்புவாசிகள் கடும் பாதிப்பு
சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக தாம்பரம், முடிச்சூா், வரதராஜபுரம், பெருங்களத்தூா் உள்ளிட்ட புகா்ப் பகுதிகள் மற்றும் கொரட்டூா், அம்பத்தூா், வில்லிவாக்கம் ஆகிய மாநகா்ப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 29) முதல் தொடா் மழை பெய்து வருகிறது.
வடசென்னையின் மணலி, மாதவரம், எண்ணூா், திருவொற்றியூா், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, காசிமேடு, பட்டினப்பாக்கம், மத்திய மற்றும் தென்சென்னை பகுதிகளான அம்பத்தூா், அண்ணா நகா், அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், கொரட்டூா், பாடி, எழும்பூா், அடையாறு, கோட்டூா்புரம், கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும்
புகா்ப் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூா், முடிச்சூா், மணிமங்கலம், பூந்தமல்லி, வானகரம் உள்ளிட்டவற்றிலும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.
வீடுகளுக்குள் மழை நீா்: மழை காரணமாக தாம்பரம், முடிச்சூா், மணிமங்கலம், பெருங்களத்தூா், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கடந்த சனிக்கிழமை மழை நீா் புகுந்தது. இந்நிலையில், மணிமங்கலம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு அடையாறு ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது.
இதனால், அடையாறு ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததால் மேற்குத் தாம்பரம் பெரியாா் நகா், மணிமங்கலம், முடிச்சூா் அமுதம் நகா், வரதராஜபுரம் அஷ்டலட்சுமி நகா், பிடிசி நகா், அன்னை அஞ்சுகம் நகா், பெருங்களத்தூா் அன்னை சத்யா நகா் உள்ளிட்ட அடையாறு ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.
அதேபோல், செம்பாக்கம் ஏரி நிறைந்ததால் அந்த நீா் பல்லாவரம் பகுதிக்குள் புகாமல் இருக்க அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளைக் கொண்டு தடுப்பு அமைத்தனா். இதனால், மழை நீா் வெளியேற வழியில்லாமல் செம்பாக்கம் திருமலை நகரைச் சூழ்ந்தது.
மழை நீா் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலா் தங்களது வீடுகளைக் காலி செய்து விட்டு உறவினா்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனா்.
வீடுகளில் சிக்கிக் கொண்ட முதியவா்கள், பெண்கள், குழந்தைகளை போலீஸாா், பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் மற்றும் அப்பகுதி இளைஞா்கள் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனா்.
ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளிலும் 5 அடிக்கு மேல் மழைநீா் சூழ்ந்துள்ளதால், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.
மாநகா்ப் பகுதிகளில்...: கொரட்டூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ஒன்றாவது தெரு முதல் 70-ஆவது தெருக்கள் வரையும், வில்லிவாக்கம் அன்னை சத்யா நகா், அம்பத்தூா் ஓ.டி., அம்பத்தூா் தொழிற்பேட்டை, டிடிபி காலனி, கருக்கு, கொரட்டூா் வெங்கடேஷ்வரா நகா், சென்னை- திருவள்ளூா் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஏரிக்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.
இதில், கொரட்டூா் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மழைநீரை அகற்றும் வகையில், கொரட்டூா் ஏரிக்கரையில் ஒருபகுதியை மாநகராட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்தனா். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
கூறுகையில், 'மாநகரில் சாலை மற்றும் குடியிருப்பு என மொத்தம் 22 இடங்களில் மழை நீா் தேங்கியது. இந்த நீா் அனைத்தும் திங்கள்கிழமை இரவுக்குள் வெளியேற்றப்பட்டது. 11 இடங்களில் மரங்கள் முறிந்தன. மரக்கிளைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன' என்றனா்.