’ட்ராமா’ (TRAUMA) திரைப்பட விமர்சனம்- விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ட்ராமா’ (TRAUMA) திரைப்பட விமர்சனம்- விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ட்ராமா’ (TRAUMA) திரைப்பட விமர்சனம்- விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ட்ராமா’ (TRAUMA) திரைப்பட விமர்சனம்- விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

 

 

திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமடையும் சாந்தினிக்கு, ஒரு மர்ம போன் கால் மூலம் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா தனது கணவர் விவேக் பிரசன்னா இல்லை, என்ற உண்மை தெரிய வருவதோடு, அதே போன் கால் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ அனுப்பப்பட்டு மிரட்டப்படுகிறார். 

 

 

 

ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, காதலனால் கர்ப்பமடைந்து ஏமாற்றப்படுவதோடு, காதலனின் உண்மையான பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருடன் வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார். 

 

 

 

இந்த இரண்டு கதைகளிலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அதில் இருந்து மீண்டார்களா?, இவர்களின் பாதிப்புக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற கதையை மூன்று விதமான கதைகளாக பிரித்து சொல்லி, அவைகளை மர்ம முடிச்சுகளால் இணைப்பது தான் ‘ட்ராமா’.

 

 

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு மூலம் பல உணர்வுகளை கொட்டி தீர்த்திருக்கிறார். மனைவியின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது தெரிந்தாலும், அதை மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால் மனைவிக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு ஆகியவற்றை எண்ணி வருந்துவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

 

 

 

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, குழந்தை மீதான ஆர்வம், குழந்தை இல்லாத கவலை, கர்ப்பமடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம், பிறகு அதே கர்ப்பத்தால் உருவெடுக்கும் பிரச்சனை என பல இடங்களில் அழுத்தமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

 

 

இளம் நாயகனாக நடித்திருக்கும் பிரதோஷ், அவரது காதலியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

 

 

விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ் நடிப்பிலும் குறையில்லை. மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

 

 

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

 

 

ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் கேமரா படத்தின் தரத்தை உயர்த்தி காட்டியிருக்கிறது.

 

 

 

ஒரே கதையை மூன்று விதமான கதைகளாக பிரித்து சொல்லி, அவற்றை மர்ம முடிச்சுகள் மூலம் இணைத்திருக்கும் படத்தொகுப்பாளர் முகன் வேல் பணி கவனம் ஈர்க்கிறது.

 

 

 

எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது.

 

 

 

மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த விசயத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கும் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன், எதிர்பாராத திருப்பங்கள் மூலம் காட்சிக்கு காட்சி அதிர்ச்சியளித்து பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட வைத்துவிடுகிறார். சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.