குழந்தை மற்றும் அவரது செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜால கதை தான் ஓ மை டாக்.
வெளியானது 'ஓ மை டாக் 'படத்தின் ஸ்னீக்பிக்
குழந்தை மற்றும் அவரது செல்லப்பிராணி பற்றிய ஒரு மாயாஜால கதை தான் ஓ மை டாக்.
அமேசான் பிரைம் வீடியோவின் பிரிமியர் அறிவிப்பிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ஓ மை டாக்' படத்தின் ஸ்னீக்பிக் வெளியானது. 2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் அறிமுக நடிகர் அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தைப் பற்றி நடிகர் அருண் விஜய் பேசுகையில், '' டீஸரில் பார்த்ததைப் போல் இந்த திரைப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே தனித்துவமான நட்பு மற்றும் அழகான - வேடிக்கையான தருணங்களை காண்பிக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை முதன்முதலாக கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை நான் உணர்ந்தேன். இந்தத் திரைக்கதையில் ஏராளமான உணர்வுகள் இடம்பெற்றிருந்தன. பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது. தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்தப்படத்தில் என்னுடைய மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிர்ஷ்டம் என்றே நான் நம்புகிறேன்.'' என்றார்.
ஒவ்வொரு குழந்தைகளும், செல்ல பிராணி மீது அன்பு கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாக 'ஓ மை டாக்' உருவாகி இருக்கிறது. அர்ஜுன் மற்றும் அவரது நாய்க்குட்டி சிம்பாவை பற்றிய இதயத்தை வருடும் கதை. ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் விரும்பி பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படம் இது. குழந்தைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளின் உலகத்தில்.. அவர்களின் ஆசைகள், முன்னுரிமை, அக்கறை, துணிச்சல், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற அன்பு, விஸ்வாசம் ஆகியவை குறித்து இந்த திரைப்படம் ஆராய்கிறது.
'ஓ மை டாக்' படத்தை ஜோதிகாவும் சூர்யாவும் தயாரித்துள்ளனர். ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ் ஆர் ரமேஷ் பாபு ஆகியோர் ஆர். பி டாக்கிஸ் சார்பாக இணைந்து பணியாற்றியுள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.
கோடை விடுமுறையை 'ஓ மை டாக்' குடன் கொண்டாடுங்கள். ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தியா மற்றும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரத்யேகமாக உலகளாவிய பிரிமியரில் ஃபேமிலி என்டர்டெய்னராக வெளியாகிறது.