’மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா
’மின்மினி’ படத்தின் டிரெய்லர் ம்ற்றும் இசை வெளியீட்டு விழா!
ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.
ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியான ஒரு படமாக 'மின்மினி' அமைந்திருக்கிறது. லாபம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படம் எடுக்கவில்லை. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசைதான். பலரும் இந்தப் படம் பார்த்துவிட்டு ஃபீல் குட் படம் என்பதால், ஓடிடிக்கு நேரடியாக கொடுத்துவிடுங்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ’மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. பாலச்சந்தர் சார் எப்படி ரஜினி, கமல் சாரை அறிமுகப்படுத்தினாரோ அப்படி நாங்களும் இந்தப் படத்தில் நல்ல நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இளையராஜா இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார். ஹலிதா எந்த விஷயத்திலும் காம்ப்ரமைஸ் செய்ய விரும்பாதவர். இந்தப் படம் சிறப்பாக வர காரணம் அவர்தான். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.
நடிகை எஸ்தர், "நான் சின்ன பொண்ணாக இருந்தபோது இந்தப் படத்தில் கமிட் ஆனேன். பல லொகேஷன்ஸ் பல நினைவுகள் இருக்கிறது. ஹலிதாவுக்கு நன்றி. இந்தப் படத்தின் இசை கேட்கும்போது எமோஷனல் ஆகிவிடுவேன். கதிஜா அந்தளவு நல்ல இசையைக் கொடுத்துள்ளார். எனது நண்பர்கள், குடும்பம் என எல்லோரும் 'மின்மினி'க்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது".
நடிகர் கெளரவ் காளை, "ஹலிதா மேமுடன் பணிபுரிந்தபோது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். உடன் நடித்தவர்களும் ரொம்ப சின்சியராக நடித்துக் கொடுத்தார்கள்".
நடிகர் பிரவீன் கிஷோர், "இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் ஹலிதா மேம் கூடதான். அவர் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. குழந்தைகள் அடுத்தக் கட்டத்திற்கு வளர்ந்து நிற்க வேண்டும் என்று இவ்வளவு நாட்கள் ஒரு படத்திற்கு யாராவது காத்திருப்பார்களா எனத் தெரியவில்லை. கதிஜா மேம் இசையும் நன்றாக வந்திருக்கிறது".
பாடகர் சிரிஷா, "ஹலிதா, கதிஜாவிடம் பணிபுரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".
'திங்க் மியூசிக்' சந்தோஷ், "'பூவரசம் பீப்பி' படத்தில் இருந்து ஹலிதாவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. கதிஜா போன்ற இளம் புதுதிறமைகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஃபீல்குட் படம். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்".
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான், "இது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. இந்தப் படத்திற்காக கடந்த 2022-ல் ஹலிதா மேம் என்னை அணுகினார். அவருக்கும் என் இசை பிடித்திருந்தது. ஹலிதா மேம் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது எனக்கு வேலை செய்ய இன்னும் எளிதாக இருந்தது. என்னை நம்பி வேலை கொடுத்த ஹலிதா மேமுக்கும் எனக்கு வேலையில் பக்கபலமாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரசிகர்கள் நீங்க பிடித்திருந்தால் நல்லதா சொல்லுங்க, இல்லை என்றாலும் சந்தோஷம்தான்”.
இயக்குநர் ஹலிதா ஷமீம், “’மின்மினி’ படத்திற்காக ஷங்கர் சார் வரை ரீச் ஆகி இருக்கிறது. குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களுக்காகக் காத்திருந்தேன். இந்தப் படத்தை நம்பி இத்தனை வருடங்கள் கழித்தும் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிடுபவர்கள் எல்லோருக்கும் நன்றி. கண்டிப்பாக நீங்கள் படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டும்” என்றார்.