’மார்கன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மார்கன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’மார்கன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’மார்கன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

மர்ம மனிதர் ஒருவர், ரசாயனத்தை உடலில் செலுத்தி பெண் ஒருவரை கொலை செய்து, உடலை குப்பை தொட்டியில் வீசுகிறார். இந்த கொலை பற்றி அறியும் மும்பையைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் ஆண்டனி, அதிர்ச்சியடைவதோடு, தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னைக்கு வருகிறார். சென்னை காவல்துறை அவருக்கு சில உதவிகளை செய்துக் கொடுக்கிறது. விசாரணையை தொடங்கும் விஜய் ஆண்டனி, தனக்கு கிடைக்கும் தடயங்கள் மூலம் அஜய் தீசனை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். ஆனால், அவரது விசித்திரமான செயல்கள் பல சந்தேகங்களை எழுப்ப, மறுபக்கம் அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணை வளையத்திற்குள் சிக்கிய அஜய் தீசன் யார்?, கொலைகளுக்கான பின்னணி என்ன?, உண்மையான குற்றவாளியை விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை வழக்கமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியோடு, சித்தர்களின் சித்து விளையாட்டு என்ற புதிய களத்தோடு சேர்த்து சொல்வது தான் ‘மார்கன்’. 

 

விஜய் ஆண்டனி அசால்டாக கையாளக்கூடிய விசாரணை அதிகாரி வேடத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். ரசாயனத்தால் உடலில் ஏற்பட்ட பாதிப்போடு, அவர் மேற்கொள்ளும் விசாரணையும், அவரது உடல் மொழியும் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்த உதவியிருக்கிறது. 

 

அனைத்து திறமைகளையும் நன்கு கற்று தேர்ந்தவர் அறிமுக நடிகர் அஜய் தீசன், என்பதை நிரூபிப்பதற்காகவே அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது போல் இருக்கிறது. அவரும் நடிப்பு, ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்தும் தனக்கு வரும் என்பதை நிரூபித்திருக்கிறார். 

 

சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.  

 

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சாதாரண காட்சிகளை கூட ரசிகர்கள் கூர்ந்து கவனிக்க செய்கிறது. திரைக்கதையில் ஏற்படும் சில தொய்வுகளை கூட பார்வையாளர்கள் மறந்து கதையோடு பயணிக்க வைக்கும் அளவுக்கு பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா கிரைம் திரில்லர் பாணிக்கு ஏற்ப பணித்திருக்கிறது. குறிப்பாக சாதாரண பொருட்கள் கூட திரைக்கதையின் திருப்பத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் அளவுக்கு காட்சிகளை கையாண்டிருக்கிறார். 

 

விஷ்ணு மற்றும் லியோ ஜான் பாலின் திரைக்கதை வழக்கமான கிரைம் திரில்லர் பாணியில் இருந்தாலும், அதில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்கும் விதத்தில் சித்தர்களின் சித்து விளையாட்டு அமைந்திருக்கிறது. ஆனால், அதை முழுமையாக சொல்லாமல், சட்டென்று திரைக்கதையை வேறு ஒரு பாதையில் பயணிக்க வைத்தது பார்வையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. 

 

எழுதி இயக்கியிருக்கும் லியோ ஜான் பால் வெற்றிகரமான படத்தொகுப்பாளர் என்பதால், எந்த விசயமாக இருந்தாலும் அதை எவ்வளவு நேரத்தில், எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்திருக்கிறார். படத்தின் முதல் பாதியிலேயே குற்றவாளி இவர் தான், என்று பார்வையாளர்கள் முடிவு செய்துகொள்ளும் அளவுக்கு காட்சிகளை அமைத்திருப்பவர், அவர் தான் குற்றவாளி என்பதை விஜய் ஆண்டனி எப்படி நிரூபிக்கப் போகிறார்? என்ற கேள்விக்கான விடையை மிக விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார். இரண்டாம் பாதியில் எதிர்பார்க்காத திருப்படத்துடன் வேறு ஒரு களத்தில் பயணிக்கும் திரைக்கதை, இறுதியில் கொலைக்கான தீர்வாக சொல்லும் விசயங்கள் சுவாரஸ்யம்.

 

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை புதுவிதமாக சொல்லி மக்களை சீட் நுணியில் உட்கார வைத்த ‘மார்கன்’ படக்குழுவுக்கு சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.