கிரண் அப்பாவரமின் 'செபாஸ்டியன் பி.சி. 524' பிறந்தநாள் லுக் வெளியீடு

கிரண் அப்பாவரமின் 'செபாஸ்டியன் பி.சி. 524' பிறந்தநாள் லுக் வெளியீடு
கிரண் அப்பாவரமின் 'செபாஸ்டியன் பி.சி. 524' பிறந்தநாள் லுக் வெளியீடு

கிரண் அப்பாவரமின் 'செபாஸ்டியன் பி.சி. 524' பிறந்தநாள் லுக் வெளியீடு

 

கிரண் அப்பாவரம் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள 'செபாஸ்டியன் பி.சி. 524' சிறப்பு பிறந்தநாள் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.
'ராஜா வாரு ராணி வாரு' படத்தின் மூலம் கிரண் அப்பாவரம் தெலுங்கு சினிமாவில் தன் மீது கவனம் ஈர்த்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இளம் நடிகரான கிரண் அப்பாவரம் பல புதிய சுவாரஸ்யமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த வரிசையில் அவர் நடித்துள்ள 'எஸ்ஆர் கல்யாணமண்டபம்' வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
அதன் பின்னர் சிறு இடைவெளியில் கிரண் 'செபாஸ்டியன் பி.சி. 524' திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனை பாலாஜி சாயாபூரெட்டி எழுதி இயக்கியுள்ளார். படத்தை பிரமோத் மற்றும் ராஜூ தயாரிக்கின்றனர். நம்ரதா தாரேகர் மற்றும் கோமலி பிரசாத் நாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தப் படம் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட நபரின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிரணுக்கு இது முதல் தமிழ் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவரின் பிறந்தநாளை (ஜூலை 15) ஒட்டி படத்தின் சிறப்பு லுக் வெளியாகி இருக்கிறது. சிறப்பு லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் பிரமோத், ராஜூ இணைந்து வெளியிட்டனர். இந்த பிறந்தநாள் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர்கள் பிரமோத் மற்றும் ராஜூ, "பிறந்தநாள் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ஊக்கமளிக்கிறது. கடந்த கிறிஸ்துமஸின் போதுதான் நாங்கள் முதன்முதலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். அப்போதிருந்தே இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 'எஸ்ஆர் கல்யாணமண்டபம்' ரிலீஸ் ஆன பின்னர்  'செபாஸ்டியன் பி.சி. 524' திரைப்படம் ரிலீஸ் ஆகும். இது முழுக்க முழுக்க ஒரு வணிக சினிமா" என்றனர்.
இயக்குநர் கூறும்போது, “கிரண் இந்தப் படத்தில் போலீஸ்காரராக நடிக்கிறார். செபா என்ற பெயரில் ஏற்று நடித்துள்ள இந்தப் பாத்திரம் அற்புதமானது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. கிரண் பலவிதமான பாத்திரங்களை ஏற்று நடித்து தன்னை நிரூபித்து வருகிறார். இப்படத்தில்  ஜிப்ரானின் இசை தனிச்சிறப்பானது. பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையிலும் அவர் சிறப்பித்துள்ளார். இந்தப் படம் பரவலாக ரசிகர்களைப் பெறும் என்றார்.
கிரணின் பிறந்தநாளான ஜூலை 15ல்  'செபாஸ்டியன் பி.சி. 524' சிறப்பு பிறந்தநாள் லுக், 'எஸ்ஆர் கல்யாணமண்டபம்' படத்தின் டீஸர், சம்மதமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.
இதுதவிர கோடி ராமகிருஷ்ணனின் மகள் கோடி திவ்யதீப்தி தயாரிக்கும் படம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது. மணி சர்மா அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதை கார்த்திக் ஷங்கர் தயாரிக்கிறார். இந்தப் படம் கிரணின் ஐந்தாவது படமாக இருக்கும்.
'செபாஸ்டியன் பி.சி. 524' படத்திற்கு  டிக்கெட் ஃபேக்டரி டிஜிட்டல் பார்ட்னராக ஒப்பந்தமாகியுள்ளது. ராஜ் கே நல்லி படப்பிடிப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக கிரண் பணியாற்றியுள்ளார். விப்லவ் நியாஷதம் எடிட்டிங் வேலை செய்துள்ளார். பிரமோத், ராஜூ தயாரிக்க சித்தா ரெட்டி பி இணை தயாரிப்பாளராக உள்ளார். படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார் பாலாஜி சய்யாபூரெட்டி