‘ஜின்’ திரைப்பட விமர்சனம் விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

‘ஜின்’ திரைப்பட விமர்சனம் விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மன்னர்களால் மந்திரவாதிகள் மூலம் உருவாக்கப்பட்ட தீய சக்தி தான் ஜின். இதில், நல்ல ஜின்களும் உண்டு. நல்ல ஜின்கள் மன்னர்களின் பாதுகாவலர்களாக இருப்பதோடு, மக்களுக்கு நல்லதும் செய்து வந்தன. இப்படிப்பட்ட ஜின்கள் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்பது தான் கதை.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஒருவரிடம் இருந்த நல்ல ஜின் ஒன்று நாயகன் முகேன் ராவ் வசம் வருகிறது. அது வந்த பிறகு, காதல், கல்யாணம், இசைக்குழு தொடக்கம் என்று அவரது வாழ்க்கையில் பல நல்ல விசயங்கள் நடக்கிறது. அதே சமயம், அவ்வபோது வீட்டில் இருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வர, அவரது மனைவியும் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதற்கெல்லாம் காரணம் ஜின் தான் என்று நினைத்து அதை வெளியே வீசி விடுகிறார்.
ஆனால், அந்த ஜின் முகேனை விடாமல் துரத்துவதோடு, மனைவி மீதான தாக்குதல் மற்றும் ஜின் பற்றிய ரகசியம் ஒன்று முகேனுக்கு தெரிய வருகிறது. அது என்ன?, அதற்கும் அவரது மனைவி தாக்கப்பட்டதற்கும் என்ன சம்மந்தம்?, என்பதை கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஃபேண்டஸி ஜானரில் சொல்வது தான் ‘ஜின்’.
நாயகனாக நடித்திருக்கும் முகேன் ராவ், நடிப்பதை விட சிரிப்பதை தான் அதிகம் செய்திருக்கிறார். காதல், கோபம், நகைச்சுவை என பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தும், அவற்றை செய்ய தெரியாமல் தடுமாறியிருப்பவர், அதனை சமாளிப்பதற்காக படம் முழுவதும் விதவிதமாக சிரித்து மழுப்புகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, கொஞ்சம் காதல் காட்சி, சில பாடல் காட்சிகளில் தலை காட்டுவதோடு, கோமாவில் படுத்து விடுகிறார். பிறகு கிளைமாக்ஸில் தலைக்காட்டுவது என தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி, பொருந்தாத வேடத்தில் பார்வையாளர்களை கடுப்பேற்றும் வகையில் நடித்திருக்கிறார். பாலசரவணன் வரும் காட்சிகள் சில சிரிக்க வைப்பது ஆறுதல்.
வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி, சிறுவன் ரித்விக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில் ஆரம்பக் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.
இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்.
எழுதி இயக்கியிருக்கும் டி.ஆர்.பாலா, ஜெய்சங்கரின் ‘பட்டணத்தில் பூதம்’ முதல் பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ வரை நாம் பார்த்து பழகிய பூதத்தை ஜின் என்ற பெயரில், புதிய வடிவில் கொடுத்திருக்கிறார்.
ஜின்களின் தோன்றல் மற்றும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெட்டியில் அடைக்கப்பட்ட ஜின் முகேன் வசம் வருவதற்கான பின்னணி கதைகளை ஓவிய காட்சிகளாக சொல்லப்பட்டாலும், சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். அதேபோன்று, படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் படம் பார்வையாளர்களை கவர்ந்திருக்கும்.
இரண்டாம் பாதியில் ஜின் கிராபிக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதை நகர்த்தப்படுவது சிறுவர்களை கவரும் முயற்சியாக இருந்தாலும், தரமற்ற கிராபிக்ஸ் கதாபாத்திரம் மற்றும் அதன் செயல்பாடுகள் கதையோடு ஒட்டாமல் பயணிப்பது படத்திற்கு பலவீனம். சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.