“ நெடுநல்வாடை “ படத்திற்காக தயாரிப்பாளர்களான ஐம்பது முன்னாள் மாணவர்கள்

“ நெடுநல்வாடை “ படத்திற்காக தயாரிப்பாளர்களான ஐம்பது முன்னாள் மாணவர்கள்

“ முஸ்தபா முஸ்தபா என்று தொடங்கி “..“ பசுமை நிறைந்த நினைவுகளே “ பாடலுடன் பள்ளி, கல்லூரி நட்புகளுக்கு எண்ட் கார்டு விழுந்துவிடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருவது. அதையும் மீறி ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே வாழ்நாள் முழுக்க நம்மோடு பயணிப்பார்கள்.

ஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழன், சினிமாவில் நல்லபடியா வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். இயக்குநரின் பெயர் செல்வகண்ணன். படம் “ நெடுநல்வாடை”.

2000 ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் கண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரு நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள். காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்க தயாரிப்பாளர்களின் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் கண்ணன்.

இதை அறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் மற்றவர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொள்ளத் துவங்கி செய்தியைப் பரிமாற ஆரம்பித்தார்கள். உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி மொத்த மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கண்ணன் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்தார்கள். இது கதையல்ல நிஜம்.

உறுதிமொழியில் இருந்து கடந்த ஒரு வருடத்தில் ஒருவர் கூட பின்வாங்காத நிலையில், சினிமாவில் வழக்கமாக சந்திக்கும் சில சங்கடங்களைக் கடந்து ‘நெடுநல் வாடை’ வரும் மார்ச்சில் திரைக்கு வருகிறது.

படத்தின் கதை குறித்துப் பேசிய இயக்குநர் செல்வகண்ணன்,’ மகன் வழிப் பேரன், பேத்திகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை, அங்கீகாரம் சமூகத்தில் மகள் வழி உறவுகளுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக ஈமக்கடன்களில் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.

இன்னொரு பக்கம் காதல் தோல்விகளில் எப்போதும் பெண்கள் மட்டுமே குற்றவாளிகள் போல், துரோகம் இழைத்தவர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தரப்பில் இருக்கும் யதார்த்ததை, நியாயத்தையும் பேசி இருக்கிறேன். 

இரண்டும் வெவ்வேறு சமாச்சாரங்கள் போல் தோன்றலாம். ஆனால் "நெடுநல்வாடை"யில் இவையிரண்டும் சரிசமமாக கலந்து, இணைகோட்டில் பயணித்து பார்க்கிறவர்களைக் கலங்கடிக்கும்’ என்கிறார் செல்வகண்ணன்.

முக்கிய கதாபாத்திரங்கள் :

பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி.

 
தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு   :         பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ்

இயக்குநர் :         செல்வகண்ணன்

இசை         :         ஜோஸ் ஃபிராங்க்ளின்

ஒளிப்பதிவு          :         வினோத் ரத்தினசாமி

பாடல்கள்   :         கவிப்பேரரசு வைரமுத்து

படத்தொகுப்பு     : மு.காசிவிஸ்வநாதன்

கலை                    : விஜய் தென்னரசு

சண்டை பயிற்சி   : ராம்போ விமல்

நடனம்                 : தினா, சதீஷ்போஸ்

மக்கள் தொடர்பு  : மணவை புவன்.