’செல்ல குட்டி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’செல்ல குட்டி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
நாயகர்கள் டிட்டோ, மகேஷ் மற்றும் நாயகி தீபிக்ஷா ஒரே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார்கள். தாய், தந்தை இல்லாத மகேஷ் மீது தீபிக்ஷா இரக்கம் காட்ட, அதை காதல் என்று புரிந்து கொள்ளும் மகேஷ் அவரை காதலிக்கிறார். ஆனால், தீபிக்ஷா மகேஷின் நண்பர் டிட்டோவை ஒரு தலையாக காதலிக்கிறார். மகேஷ் தீபிக்ஷாவிடம் தனது காதலை சொல்ல ,அதை அவர் நிராகரித்து விடுகிறார். இதனால் படிப்பு மீது கவனம் செலுத்தாமல் மகேஷ் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார். மற்றவர்கள் தேர்ச்சி பெற்று பொறியியல் பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.
இதுக்கு நடுவில், தீபிக்ஷாவின் மனதில் இருக்கும் டிட்டோ அவரது வாழ்க்கை துணையாவதற்காக சூழல் அவரது குடும்பம் மூலம் உருவாகிறது. ஆனால், நண்பன் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வது துரோகம் என்று கருதும் டிட்டோ தீபிக்ஷாவை நிராகைத்து விடுகிறார். தான் ஆசைப்பட்டாலும் விருப்பம் இல்லாதவரை மனக்க கூடாது என்று தீபிக்ஷாவும் டிட்டோவை நிராகரித்து விட, அதன் பிறகு அவர்களது வாழ்க்கை என்னவானது?, காதலுக்காக வாழ்க்கையை தொலைத்த மகேஷ் என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
முதன்மை வேடத்தில் நடிச்ச டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. நன்றாக நடித்தும் இருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாகவும், படிப்பு முடிந்து முதிர்ச்சி அடையும் காலகட்டத்திலும் நடிப்பில் வேறுபாட்டை காண்பித்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகியாக நடிச்ச தீபிக்ஷா அளவாக நடிச்சு பேர் வாங்கி விடுகிறார். மற்றொரு நாயகியாக நடிச்ச சிம்ரன் குறைவான காட்சிகளில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
மதுமிதா, சாம்ஸ் இருவரும் வரும் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது. திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, என எல்லோரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிச்சிருக்காங்க.
டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேடும் ரகம். சிற்பியின் பின்னணி இசை காட்சிகளின் கூடுதல் சுவை சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் கதைக்கேற்ப பயணியாற்றியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளை இவர்களது கேமரா கலர்புல்லாக படமாக்கி ரசிக்க வைக்கிறது.
கதை எழுதி இயக்கிய சகாயநாதன், முக்கோண காதல் கதையை திறம்பட இயக்கியது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில், செல்ல குட்டி சக்கரை கட்டியாக இனிக்கிறது.
இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.