’பிளாக்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பிளாக்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’பிளாக்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’பிளாக்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி


யாரும் குடியேறாத வில்லா குடியிருப்பு ஒன்றில்,  ஜீவா - பிரியா பவானி சங்கர் ஜோடி தங்களது விடுமுறை நாட்களை கழிப்பதற்காக குடியேறுகிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரே ஒரு காவலாளி திடீரென்று காணாமல் போக, மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் விளக்குகள் எரிகிறது. யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்குகள் எரிகிறது என்ற யோசனையோடு இருவரும் அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கும் போது, இவர்களது வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் போலவே அந்த வீட்டுக்குள் இருப்பதோடு, அந்த வீட்டுக்குள் இவர்களைப் போல உருவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் இருவரும், நடப்பது கணவா? அல்லது நிஜமா? என்று குழப்பமடைகிறார்கள். ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அது முடியாமல் போவதோடு, தொடர்ந்து அவர்களை சுற்றி பல மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. அதன் பின்னணி என்ன? என்பதை திகில், மர்மம், திரில்லர் என அனைத்துவிதமான உணர்வுகளோடு அறிவியலையும் சேர்த்து சொல்வது தான் ‘பிளாக்’.

இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி நடக்கும் கதையாக இருந்தாலும், அதை பலமான  திரைக்கதை மூலம் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். ஜீவா - பிரியா பவானி சங்கர் தம்பதி போலவே மற்றொரு ஜோடி எப்படி? , இரண்டு ஜோடிகளில் யார் நிஜம்? என்ற கேள்விகள் தான் படத்தின் சஸ்பென்ஸ் என்றாலும் அந்த ஒரு சஸ்பென்ஸை வைத்துக் கொண்டு, அவர்கள் வெவ்வேறு நேரங்களில் பயணிப்பது போன்ற காட்சிகள் மூலம் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை பதற்றத்தின் உட்சத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

திகில் படமா? அல்லது திரில்லர் படமா? என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் இயக்குநர் இடையில் டைம் லூப் ஜானரை வேறு ஒரு வடிவத்தில் திரைக்கதையில் இணைந்திருந்தாலும், அனைத்தையும் சிறு சிறு விசயங்களோடு லாஜிக்காக சொல்லியிருக்கிறார். 

கணவன் - மனைவியாக நடித்திருக்கும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர், தங்களை சுற்றி நடக்கும் குழப்பமான சம்பவங்களை பதற்றத்துடன் எதிர்கொள்ளும் காட்சிகளில் அனைத்துவிதமான உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருவர் மட்டுமே படம் முழுவதும் பயணித்தாலும் எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.

இரண்டு கதாபாத்திரங்கள், குறிப்பிட்ட ஒரே ஒரு களம், திரும்ப திரும்ப நடக்கும் குறிப்பிட்ட சம்பவங்கள் என்று இருந்தாலும் அதை வெவ்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இரவு நேரக் காட்சிகள் மூலம் பார்வையாளர்களையும் பதற்றமடைய வைத்திருக்கிறார். 

சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பார்வையாளர்களை பின்னணி இசை மூலம் பயமுறுத்த தேவையில்லாத சத்தங்களை சேர்க்காமல் சில குறிப்பிட்ட பீஜியம் மூலம் திரைக்கதையில் இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருப்பவர், குறிப்பிட்ட சில பீஜியம்களை கதபாத்திரமாகவே பயணிக்க வைத்திருக்கிறார்.

மிக குழப்பமான கதைக்கருவுக்கு, அதை விட குழப்பமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதை படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், மிக நேர்த்தியாக பார்வையாளர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். 

சில குழப்பங்கள் படத்தின் குறையாக தெரிந்தாலும், அறிவியல் பின்னணியில் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கும் இயக்குநர் கே.ஜி.பாலசுப்பிரமணி அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.