நான் பெண்ணியவாதி கிடையாது: அமலா பால்
நான் பெண்ணியவாதி கிடையாது; பெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது - நடிகை அமலாபால் பேட்டி
'ஆடை' படத்தில் நடித்தது குறித்தும், காமினி கதாபாத்திரத்தைக் குறித்தும் நடிகை அமலா பால் கூறியதாவது-
காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அவளுடைய நேர்மை தான், 'ஆடை' ஒரு உண்மையான படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு பொருள். ஆனால் இந்த 'ஆடை' பல உண்மைகளை காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம், இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த விஷயம் எதுவென்றால், அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றிய கூறியிருந்த கருத்து தான். இப்படத்திலேயே அதுகுறித்த வசனமும், அதாவது பிராங்க் என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வது தான் பிராங்க், தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை என்று. இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகையால் தான் இந்த கருத்துடன் அவர்களால் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதைதான் படத்தில் காண்பித்திருக்கிறோம். சுதந்திரம் என்றால் என்னவென்று அவரவர்க்கு ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்ன என்பதை படத்தில் கூறியிருக்கிறோம்,
மேலும், இப்படத்தைப் பற்றிய செய்திகளில் தவறான தலைப்புகளைப் பதிவிட்டு வரும் தந்திரம் நடந்துக் கொண்டிருக்கிறது. இது நெறிமுறையற்ற விஷயம். நாங்கள் அந்த மாதிரி படம் எடுக்கவில்லை. இப்படத்திற்கான முதல் பார்வை மற்றும் டீஸர் பார்க்கும்போதே அனைவருக்கும் தெரிந்திருக்கும் இதைவிட சிறந்ததைக் கொடுக்க முடியாது என்று. எப்போதும் ‘தம் நெயில்’ (Thumbnail)-ல் ஒன்று இருக்கும், அதன் உள்ளே சென்று பார்த்தால் வேறு ஒன்று இருக்கும். ஆனால், இப்படத்தை பொருத்தவரை அப்படி எதுவும் நடக்கவில்லை, ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அப்போது ஏற்பட்ட சர்ச்சை படம் வெளியானதும் ஏற்பட்டிருக்கும். நாங்கள் முன்பே நேர்மையாகக் கூறிவிட்டோம், படம் இப்படி தான் எடுத்திருக்கிறோம் என்று. நாங்கள் யாரையும் ஏமாற்றியோ, தவறாக வழிகாட்டியோ இப்படத்தைப் பாருங்கள் என்று கூறவில்லை.
மேலும், இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. காமினி என்ற பெண் சுதந்திரமான, தைரியமிக்க துணிச்சலான பெண், இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவாள், இதெல்லாம் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது. காமினி அவளுடைய அம்மா பெண்ணியம் பற்றி கேட்கும்போது கூட இதுதான் பெண்ணியம் என்று காமினி கூறவில்லை.
இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகின்றது. நானும் இந்த படத்தில் நடிக்கும்போது இது பெண்ணியம் சார்ந்த படம் என்று நினைக்கவில்லை. காமினி என்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்கிறது என்பதைக் காட்டுவது இப்படம். அதைதவிர பெண்ணியத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
நான் பெண்ணியவாதி கிடையாது. ஏனென்றால், பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன்.