சசிகலாவின் இந்த முறை குறி தப்பாது!
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா முன்பை விட அதிக வேகம் காட்டி வருகிறார். ஓர் ஆண்டு காலம் பெரியளவில் எந்த முன்னெடுப்பையும் எடுக்காத சசிகலா இனி என்ன செய்துவிடப்போகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அலட்சியமாக இருந்ததாம். ஆனால் தற்போது வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளதாம்.
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த சமயம் அதிமுக ஆட்சியில் இருந்தது. பதவி பறிபோய்விடுமே என பல நிர்வாகிகள் அடக்கி வாசித்தனர். தற்போது நிலைமை அப்படி இல்லை, அதுமட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் மாஜிக்கள் பலரை சசிகலாவை நோக்கி நகர்த்தி வருகிறது.
அண்மையில் தஞ்சாவூர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலாவை டெல்டா மாவட்ட மாஜி அமைச்சர் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு சசிகலாவோ இப்போது வேண்டாம், அது உங்களுக்கு சில பிரச்சினைகளை உருவாக்கும். காலம் கனிந்து கொண்டிருக்கிறது. அப்போது வாருங்கள் என கூறினாராம். உடனே தனது சம்பந்தியை அனுப்பி ஆதரவு தெரிவித்துள்ளார். சம்பந்தி போன் போட்டு கொடுக்க அவர் முன்னிலையிலும் மாஜி பேசியுள்ளார்.
“எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் என்னை போல் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். வெளிப்படையாக பேசுங்கள். உடனே வருகிறோம்” என பேசினாராம்.
அது மட்டுமல்லாமல் தனது குடும்பத்தையே சசிகலாவுக்கு ஆதரவு திரட்ட களமிறக்கிவிட்டுள்ளாராம் . அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் மகன் பேசி வருகிறார். சசிகலாவுக்கு எதிராக செயல்பட்ட பலரும் ஆதரவு அணியில் சைலண்டாக இணைந்து வருகின்றனராம்.
சசிகலா அதிமுகவுக்குள் வரும் பட்சத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றும் திட்டமும் டெல்டா மாஜிக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
“ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை இந்த பக்கமா, அந்த பக்கமா என யாராலும் கணிக்க முடியாதபடிக்கு குழப்பி வருகிறார். சமீபத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக அவர் பேசியிருந்தாலும் அதில் உறுதியாக நிற்பாரா என்பது அவருக்கே தெரியாது எனவே அவரை சசிகலா உறுதியாக நம்ப மாட்டார். அவரது சமூகத்தை சேர்ந்தவரான டெல்டா மாஜி ஓபிஎஸ்ஸின் இடத்தை பிடிக்க பிளான் செய்கிறார்” என்கிறார்கள் டெல்டா வட்டாரத்தினர்.