அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டலத்தில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.7) வெளியிட்ட அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.