தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை: அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை: அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு தாக்கல் செய்த பொதுநல மனுவில், உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகின்றன.

பள்ளிச் செல்கின்ற குழந்தைகளால் மத்திய, மாநில அரசுகளின் இந்த மருத்துவ அறிவுறுத்தல்களை பின்பற்ற முடியாது. கரோனா வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதில் தாக்க கூடியது. எனவே தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். எனவே பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு புகார் மனு அளித்தேன்.அந்த மனு மீது இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளது. இனால் விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில்  கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு  எடுத்து வருகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு தொடர்பான சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர்.மேலும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவிறுத்தி  வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.