காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கு ரத்து: ராணுவம் அறிவிப்பு

காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கு ரத்து: ராணுவம் அறிவிப்பு
காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது சிவில் சட்டம் குறித்த கருத்தரங்கு ரத்து: ராணுவம் அறிவிப்பு

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆடிட்டோரியத்தில் நாளை மறு தினம் (மார்ச் 26) பொது சிவில் சட்ட விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் நடத்தப்பட இருப்பதாக ராணுவம் சார்பில் ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தனது டிவிட்டரில், ‘‘மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் குறித்த விவகாரத்தில் இந்திய ராணுவம் ஈடுபடுவது பொருத்தமானதா? அதுவும் காஷ்மீர் போன்ற முக்கியமான பகுதியில் இப்படி செய்யலாமா? ராணுவம் என்பது அரசியல் சார்பற்ற, மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்.

ஆனால் பொது சிவில் சட்ட கருத்தரங்கு இந்த இரண்டு அடிப்படை கோட்பாடுகளுக்கும் அச்சுறுத்தல்’’ என்றார். மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் நஜ்முஸ் சாகிப், ‘‘ராணுவம் பாகுபாடாக நடந்து கொள்கிறது. காஷ்மீரின் அரசியல் விவகாரங்களில் அது நேரடியாக தலையிடுகிறது’’ என்றார். இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கருத்தரங்கு ரத்து செய்யப்படுவதாக ராணுவம் நேற்று அறிவித்தது. மேலும், கருத்தரங்கின் தலைப்பிற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நிர்வாக உதவியை மட்டும் ராணுவம் வழங்கியதாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது