PM CARES FUND எதற்கெல்லாம் செலவிடப்பட்டது? : பிரதமர் அலுவலகம் விளக்கம்
கொரோனா பாதிப்பைத் தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்ட ‘பிஎம் கேர்’ என்ற நிதியுதவிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதில், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைவரும் இயன்ற அளவுக்கு உதவிகளை செய்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி பெறப்பட்டது, எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இது மத்திய அரசின் பொதுத் திட்டம் கிடையாது. எனவே, தகவல்களை வெளியிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சில பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தத் திட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பி.எம் கேர் நிதியிலிருந்து 50 ஆயிரம் வென்டிலேட்டர்களைத் தயாரிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா சிறப்பு அரசு மருத்துவமனைகளுக்கு அவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிஎம் கேர் கணக்கிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை புலம்பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்டுள்ள மாநிலங்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவுக்கு 181 கோடி ரூபாயும், உத்தர பிரதேசத்துக்கு 103 கோடி ரூபாயும், தமிழ்நாட்டிற்கு 83 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.