நியூஸ் 18 தமிழ்நாடு - சிகரம் விருதுகள்’ 2019
சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் நியூஸ் 18 தமிழ்நாடு - சிகரம் விருதுகள்’ 2019
(செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிறுகிழமை இரவு 7:00 மணிக்கு)
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மனிதர்களைக் கொண்டாடும் விதமாக, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ’சிகரம் விருதுகள்' என்ற பெயரில் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான சிகரம் விருதுகள் வழங்கும் விழா புதுச்சேரியில் உள்ள ஆனந்தா இன் ஹோட்டலில் இன்று (ஆகஸ்ட் 30) மாலை நடைபெற்றது.
புதுச்சேரியில் தனி முத்திரைப்பதித்த திறமையாளர்களை அங்கீகரித்து கொண்டாடிய இந்த சிகரம் விருதுகள் விழாவில், சிறந்த சமூக சேவகர், விவசாயி, விளையாட்டு வீரர், அரசுப்பள்ளி, அரசு மருத்துவர், கலைக்குழு, தொழில்முனைவோர், கிராமம், விருந்தோம்பல், கல்வியாளர், ப்ரெஞ்ச் கலாச்சார மேன்மை ஆகிய பல்துறைகளில் தேர்வு செய்யப்பட்ட சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
அதன்படி சிறந்த விவசாயிக்கான சிகரம் விருதை ஸ்ரீலட்சுமி, விளையாட்டு வீரருக்கான விருதை சாய் பிரனிதா, சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை எம்.அப்துல்காதர், சிறந்த கல்வியாளருக்கான விருதை ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.அனிதா ஆகியோரும் பெற்றனர்.
அதேபோல், சிறந்த விருந்தோம்பலுக்கான விருது காஷா கி ஆஷா கஃபே நிறுவனத்தாருக்கும், கலைக்குழுவுக்கான விருது ராஜப்பா கலைக்குழுவுக்கும், சிறந்த மருத்துவருக்கான விருது டாக்டர்.எஸ்.ராமசுப்ரமணியத்துக்கும் விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூக சேவைக்கான விருது உயிர்த்துளி அமைப்பினருக்கும், சிறந்த அரசுப்பள்ளிக்கான விருது பனித்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், சிறந்த கிராமத்துக்கான விருது தொண்டமாநந்தம் கிராமத்துக்கும், வழங்கி கெளரவிக்கப்பட்டது.
புதுவையின் மரியாதைக்குரிய மனிதர்களை கெளரவிக்கும் வகையில் நடந்த இந்த விழாவில், புதுவை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், கல்வியாளர்கள், திரையுலக பிரபலங்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சிகரம் விருதுகள் நிகழ்ச்சி தொகுப்பு செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிறுகிழமை இரவு 7:00 மணிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .