சென்னையில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகிக்க முடியும்!

சென்னையில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகிக்க முடியும்!

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதே போல் கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுஉள்ள தண்ணீரும் பெரிதும் கைகொடுத்து வருகிறது. குடிநீர் வழங்கும் 4 ஏரிகளையும் சேர்த்து 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி சேமித்து வைக்கலாம். தற்போது 5 ஆயிரத்து 207 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சராசரியாக 50 சதவீதம் மட்டுமே நிரம்பி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் ஆயிரத்து 631 மி.கன அடி மட்டுமே தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரி, குளங்கள் பெரும்பாலும் நிரம்பி உள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் 50 சதவீதம் தண்ணீர் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 4 ஆயிரத்து 680 மி.கனஅடியும், 2018-ம் ஆண்டு ஆயிரத்து 631 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது 5 ஆயிரத்து 207 மி.கனஅடி தண்ணீர் உள்ளது (5 டி. எம்.சி.). இந்த தண்ணீரை கொண்டு அடுத்த ஆண்டு கோடை காலத்திலும் தட்டுப்பாடு இன்றி சென்னையில் குடிநீர் வினியோகிக்க முடியும்' என்றனர்.