புள்ளிவிவரங்கள் தர மேம்பாடு பணிகளைத் துவக்கியது நிதி ஆயோக்

 புள்ளிவிவரங்கள் தர மேம்பாடு பணிகளைத் துவக்கியது நிதி ஆயோக்

புள்ளிவிவரங்களின் தரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பது தொடர்பாக வழிகாட்டு அறிக்கை ஒன்றை தயாரிக்கும் பணிகளை மத்திய அரசின் திட்ட ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புள்ளிவிவரங்கள் கசிவதைத் தடுக்கவும், புள்ளிவிவரங்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்யவும் வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக இரண்டு கட்ட உயர் நிலை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்மறையான புள்ளிவிவரங்களை வெளியிடாமல் நிறுத்திவைப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொள்ளும் நிலையில், அவை வெளியே கசிந்து அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக நுகர்வோர் செலவினம் பெருமளவில் குறைந்திருப்பது தொடர்பான தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் அறிக்கை வெளியே கசிந்தது. ஆனால் இதில் புள்ளிவிவரங்கள் சரியாக இல்லை எனக்கூறி இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கையை நிதி ஆயோக் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புள்ளிவிவரங்களின் துல்லியத் தன்மையை மேம்படுத்துவதற்காக, மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உட்பட, புள்ளிவிவர சேகரிப்பில் கண்காணிப்புகளை ஏற்படுத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரங்களுக்கு விரைவில் ஒரு வழிமுறையை ஏற்படுத்த அரசு தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் புள்ளியியல் துறை ஏற்கனவே மேற்கொண்ட ஆலோசனைகள் தொடரபான அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புள்ளிவிவர சேகரிப்பு அலுவலர்களைப் பொருத்தவரை, அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும், மொத்தப் பணியும் தவறாக அமைந்துவிடக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரத்தில் மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது.