சென்னையில் பல இடங்களில் லேசான மழை
சென்னை: சென்னையில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கோவளம் தொடங்கி கல்பாக்கம் வரையிலான சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் காலை லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலையில் லேசான மழை பெய்தது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.