தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு போதாது - சுனில் மிட்டல்

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய கட்டண உயர்வு போதாது - சுனில் மிட்டல்

தொலைத்தொடர்பு துறை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதில் இருந்து மீளும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை 10 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர் அன்சு பிரகாஷை, பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

இதுகுறித்து சுனில் மிட்டல் கூறியதாவது:- கடந்த 25 ஆண்டுகளில், தொலைத்தொடர்பு துறை தற்போது மிக மிக மோசமான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் உள்ள இந்த துறைக்கு, மத்திய அரசின் பாதுகாப்பும், கருணை பார்வையும் தேவை. அதிலும், ஏஜிஆர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, நிதி நெருக்கடி அதிகமாகி விட்டது. எனவே, இந்த துறை மீண்டு வர உதவியாக 37,000 கோடி ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே கடந்த 3 ஆண்டுகளாக மிக கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் திவால் ஆகி பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. எனவே, மத்திய அரசு இந்த துறை மீள்வதற்காக உதவி செய்ய வேண்டும் என்றார். கட்டண உயர்வு குறித்து கேட்டபோது அவர் கூறுகையில், ''தற்போதைய கட்டண உயர்வு போதாது. எனவே, விரைவில் இந்த கட்டணங்களை மேலும் உயர்த்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது'' என்றார்.