டிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு

டிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு

புதுதில்லி:ஸ்மார்ட்போன்களில் டிக்டோக் பொழுதுபோக்கு மொபைல் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நடிப்பு, பாடல், நடனம், இமிடேசன் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் தளமாக உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டோக் செயலியைப் பலரும் பயன்படுத்துகின்றனர்.

இந் நிலையில், ஒருநாளில் சராசரியாக 34 நிமிடங்கள் டிக்டோக் செயலி பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேவேளையில் முகநூல் பயன்பாடு சராசரி 44 நிமிடங்களாக உள்ளது.

கடந்த 18 மாதங்களில் டிக்டோக் செயலி இந்தியாவில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை டிக்டோக் செயலி உள்ளீடு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் முகநூல் உள்ளீடு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை 75 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

18 முதல் 35 வரையிலான வயதினர் டிக்டோக் செயலியை அதிகமாகப் பயன்படுத்துவதாகவும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இதே போல, இன்ஸ்டாகிராம், டுவிட்டர், ஹலோ போன்ற செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளில் சராசரியாக இன்ஸ்டாகிராம் 23.8 நிமிடங்களும், ஹலோ 20.6 நிமிடங்களும், ஸ்நாப்சாட் 9.5 நிமிடங்களும் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.