பொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்

பொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்

மும்பை நிருபர்: நவ.8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியச் சந்தைகள் குறைந்து நிலைபெற்றன.அக்.25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இதையடுத்து நவ.1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மீட்சி காணப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் மீண்டும் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன.

நவ.1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் சந்தைகள் உயர்ந்து நிலைபெற்ற நிலையில் கடந்த வாரத்தில் கடுமையான தடுமாற்றம் காணப்பட்டது. இந் நிலையில் முக்கிய குறியீட்டெண்களான சென்செக்ஸ் குறைந்தும், நிஃப்டி சிறிது உயர்ந்தும் நிலைபெற்றன.

கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை சந்தைகளின் தொடர்ச்சியான ஏழு நாள் உயர்வுக்கு செக் வைக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டு தினங்கள் உயர்ந்த நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை மூடிஸ் எபஃக்டால் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. இதனால் ஆதாயத்தையும் இழந்தன

கடந்த வாரத்தில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகவே இருக்கும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச் தெரிவித்தது, சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு, பின்னர் அதில் ஏற்பட்ட சிக்கல், இந்தியாவின் பொருளாதாரத் தரத்தை நெகடிவ் தரத்திற்கு மூடிஸ் சர்வீசஸ் குறைத்தது மற்றும் சில காலாண்டு முடிவுகள் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.

தயாரிப்புத் துறை செயல்பாட்டில் ஏற்பட்ட சரிவு, சேவைகள் துறைகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவை தொடர்பான ஐஎச்எஸ் மார்க்கிட் ஆய்வறிக்கை, வர்த்தக ஊக்கம் குறைந்திருப்பது தொடர்பான ஆய்வறிக்கை ஆகியவையும் சந்தைகளுக்கு பாதகமாக அமைந்தன.

நவ.8ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் மொத்தமாக சென்செக்ஸ் 158.58 புள்ளிகள் அல்லது 0.39 சதவீதம் குறைந்தும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 17.55 புள்ளிகள் அல்லது 0.14 சதவீதம் உயர்ந்தும் நிலைபெற்றன. தற்போது சென்செக்ஸ் 40,323.61 புள்ளிகளிலும், நிஃப்டி 11,908.15 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.

முந்தைய நவ.1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், சென்செக்ஸ் 1106.97 புள்ளிகள் அல்லது 2.83 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 306.70 புள்ளிகள் அல்லது 2.64 சதவீதமும் குறைந்து நிலைபெற்றன. அக்.25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 0.61 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையில் 0.66 சதவீதமும் குறைந்து நிலைபெற்றன.

அக்.18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 3.07 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 3.06 சதவீதமும், அதற்கு முந்தைய செப்.27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 2.12 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 2.11 சதவீதமும் ஏற்றம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் நவ.8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சென்செக்ஸ் 40,3293.85 புள்ளிகளில் துவங்கியது. அதிகபட்சமாக 40,749.33 புள்ளிகளுக்கும் குறைந்தபட்சமாக 40,037.53 புள்ளிகளுக்கும் சென்று இறுதியில் 40,323.61 புள்ளிகளில் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் முதல் தரப் பங்குகளில் கடந்த வாரத்தில் 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் நஷ்டமடைந்தன. அதிகபட்சமாக எச்டிஎஃப்சி 4.79 சதவீதம் உயர்ந்தது. அடுத்தபடியாக யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகியவை 3 சதவீதத்திற்கு மேலும், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 சதவீதத்திற்கு மேலும் ஆதாயம் பெற்றன. வேதாந்தா, ஏசியன் பெயிண்ட், டெக் மகிந்திரா, கோடக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய பங்குகளும் அதிக ஆதாயம் பெற்றன.

யெஸ் பேங்க் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததை அடுத்து அந் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்து வருகிறது.

அதேவேளையில் மாருதி அதிகபட்சமாக 5.45 சதவீதம் நஷ்டமடைந்தது. அடுத்தபடியாக டாடா மோட்டார் டிவிஆர், எச்யுஎல் ஆகியவை 4 சதவீதத்திற்கு மேல் ஆதாயம் பெற்றன. ஓஎன்ஜிசி, சன்பார்மா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை 3 சதவீதத்திற்கு மேலும், பவர்கிரிட், ஹீரோ மோட்டோ, எல் அண்ட் டி ஆகியவை 2 சதவீதத்திற்கு மேலும் குறைந்தன. எம் அண்ட் எம், பார்தி ஏர்டெல் கோடக் பேங்க், பார்தி ஏர்டெல் ஆகியவையும் அதிக இழப்பைச் சந்தித்தன.

கடந்த வாரத்தில் நிஃப்டி 11,928.90 புள்ளிகளில் துவங்கியது. அதிகபட்சமாக 12,034.15 புள்ளிகளுக்கும் குறைந்தபட்சமாக 11,850.25 புள்ளிகளுக்கும் சென்று இறுதியில் 11,908.15 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இந் நிலையில், வரும் வாரத்தில் காலாண்டு முடிவுகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் உலக அளவிலும் உள்நாட்டிலும் புதிய காரணிகள் எதுவுமில்லாததால் சந்தைகள் சற்று மந்தமாகவே நகரும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.