பைலட் ஆன முதல் பழங்குடியின பெண்...

பைலட் ஆன முதல் பழங்குடியின பெண்...

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை "கனவு காணுங்கள்' என்பதுதான். கனவு காண வேண்டும். அந்த கனவை நனவாக்க நாள்தோறும் உழைக்க வேண்டும். கனவு என்று ஒன்று இருந்தால்தான் அதை நோக்கிய தேடுதல் இருக்கும் என்பதால்தான் அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்றார்.

அத்தகைய கலாமின் கனவை நனவாக்கியுள்ளார் பழங்குடியின பெண் ஒருவர். மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த அனுப்ரியா மதுமிதா லக்ரா என்ற பெண்தான் அத்தகைய சாதனைக்கு சொந்தக்காரப் பெண். அவர் புரிந்த சாதனை பைலட் ஆனதுதான். அதுதான் நிறைய பைலட்டுகள் உள்ளார்களே என நீங்கள் கேட்கலாம். அவசரப்பட வேண்டாம். பழங்குடி இனத்திலிருந்து பைலட் ஆன முதல் பெண் இவர் அதுவும் 27 வயதில்..

ஒடிஸா மாநிலம், மலங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த மரினியாஸ் லக்ரா, ஜிமாஜ் யாஸ்மின் லக்ரா பழங்குடியின தம்பதியின் மகள்தான் அனுப்ரியா. தந்தை மரினியால் அங்குள்ள காவல் நிலையத்தில் போலீஸாராக பணியாற்றி வருகிறார். தாய் குடும்ப தலைவி.
அனுப்ரியா தொடக்க நிலை படிப்பை உள்ளூர் மிஷினரி பள்ளியிலும், மேல்நிலைப்படிப்பை கோராபுட் மாவட்டத்திலும் படித்தார். பைலட் ஆக வேண்டும் என்பதுதான் அவரின் பள்ளிக் காலங்களின் கனவாக இருந்தது. பைலட் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை ஒவ்வொருவரிடமும் சொல்லி, சொல்லி மகிழ்வார் அவர். பள்ளிப் படிப்பை தொடர்ந்து புவனேஷ்வரிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனாலும், பைலட் கனவை அவரால் விட முடியவில்லை. அதனால் அவர் சில மாதங்களில் அந்த கல்லூரியை விட்டு வெளியேறி புவனேஸ்வரிலுள்ள (GATI)ல் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.

படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக உறவினர்களிடமும், நண்பர்களிடம் கடன் பெற்று படிக்க வைத்தோம். நாங்கள் படும் கஷ்டங்களை பார்த்து சிறப்பாக படித்தார் அனுப்ரியா. மேலும், கமர்ஷியல் பைலட் உரிமம் பெறுவதற்காக அனுப்ரியா பல தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி கண்டவர். தங்களின் உயர்விற்காக பெற்றோர் படும் சிரமங்களை அவர் உணர்ந்திருந்ததால், மிகவும் அக்கறையுடன் தேர்வுகளை தயார் செய்வார் அனுப்ரியா என்கின்றார் அவரின் தந்தை.

"அனுப்ரியாவின் உழைப்பும், விடாமுயற்சியும் வீண் போகவில்லை. அவர் விமானியாக தேர்வு செய்யப்பட்டு தனது கனவை நனவாக்கிவிட்டார். 41.20 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்ற பழங்குடியின பெண்களுக்கு மத்தியில் அனுப்ரியா பெற்றுள்ள சாதனை , பழங்குடியின மக்களின் கல்வியறிவு உயர்விற்கும், மற்ற பெண்களின் லட்சியம் நிறைவேறுவதற்கும் உந்து சக்தியாக இருக்கும்'' என்கிறார் அவரது தாய் ஜிமாஜ்.இவரின் சாதனையை ஒடிஸாவின் முதல்வர் பாராட்டியுள்ளதுடன். அவர் மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.