இந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9% உயரும்

இந்திய ஊழியர்களின் சம்பளம் அடுத்த ஆண்டில் 9% உயரும்

ஆய்வுத் தகவல்

புது தில்லி:வரும் 2020ம் ஆண்டில் ஆசியாவிலேயே இந்தியர்களின் ஊதியம் அதிகபட்சமாக 9.2 சதவீதம் அளவுக்கு உயரும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கார்ன் ஃபெர்ரி குளோபல் ஊதிய ஆய்வறிக்கையில் இது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

2020ம் ஆண்டில் ஆசியாவில் அதிகபட்சமாக இந்திய ஊழியர்களுக்கு 9.2 சதவீதம் அளவுக்கு ஊதியம் உயரும். இது கடந்த ஆண்டில் 10 சதவீதம் என்ற அளவில்இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் உண்மையான ஊதிய உயர்வு 5 சதவீத அளவிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவைப் பொருத்தவரை ஊதிய உயர்வு எதிர்பார்ப்பில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சர்வதேச அளவில் அடுத்த ஆண்டில் ஊதிய உயர்வு எதிர்பார்ப்பு 4.9 சதவீதமாக மதிப்பிடப்படுகிறது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டால் ஊதிய உயர்வு 2.1 சதவீத அளவிலேயே இருக்கும்.

ஆசியாவைப் பொருத்தவரை இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஊதிய உயர்வு எதிர்பார்ப்பானது இந்தோனேசியாவில் 8.1 சதவீதமாகவும், சீனாவில் 6 சதவீதமாகவும் இருக்கும். இது ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளில் மிகக் குறைவாக முறையே 2 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் என்ற நிலையில் இருக்கும். ஆசியாவில் ஊதிய உயர்வு எதிர்பார்ப்பு 5.3 சதவீதமாகவும், சரிக்கட்டப்பட்ட ஊதிய உயர்வு 3.1 சதவீதமாகவும் இருக்கும்.இந்த ஊதிய உயர்வானது பணியாளர்களின் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாறுபடக்கூடும்.

130 நாடுகளில் உள்ள சுமார் 25,000 நிறுவனங்களில் பணியாற்றும் 2 கோடி பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக கார்ன் ஃபெர்ரி குளோபல் தெரிவித்துள்ளது.