தெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 10 பதக்கம்

தெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 10 பதக்கம்
தெற்காசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 10 பதக்கம்

காத்மண்டு:13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தடகள போட்டிகள் காத்மண்டுவில் உள்ள தசரத் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 11.80 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இலங்கை வீராங்கனைகள் தனுஜி அம்ஷா (11.82 வினாடி) வெள்ளிப்பதக்கமும், லக்‌ஷிகா சுகந்த் (11.84 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஜாஷ்னா 1.73 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ருபினா யாதவ் (1.69 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷாரே 2.21 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் சேத்தன் பாலசுப்பிரமன்யா 2.16 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், வென்றனர். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் 3 நிமிடம் 54.18 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அஜீத் குமார் (3 நிமிடம் 57.18 வினாடி) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கவிதா யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் சண்டா வெள்ளிப்பதக்கமும், சித்ரா பாலாகீஸ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். தடகள போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றியது.