போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

பூந்தமல்லி: ஆண்டிமடம் காவல் நிலையத்தில், வெடிகுண்டுகளுடன் நுழைந்து, ஆயுதங்களை கொள்ளையடித்த வழக்கில், 11 பேருக்கு, தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்தில், 1997ம் ஆண்டு, வெடிகுண்டுகளுடன் நுழைந்த கும்பல், காவலர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி, அங்கிருந்த துப்பாக்கிகள், சீருடைகள், தோட்டாக்கள், வாக்கி டாக்கி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.இது சம்பந்தமாக, சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட, 15 பேரை, உளவு பிரிவு போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்த போது, குற்றம் சாட்டப்பட்ட சுந்தரம், சரவணன், உத்திரபதி ஆகிய மூன்று பேர் இறந்து விட்டனர்.வீரையா என்பவர் அப்ரூவராக மாறினார். இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி செந்துார்பாண்டி, குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள, 11 பேருக்கும் தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயராஜ் ஆஜரானார். வழக்கில், 72 சாட்சிகள், 101 ஆவணங்கள், 67 சான்று பொருட்கள் சமர்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.