வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம், புத்தகம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இம்மானுவேல் கூறுகையில், ‘‘வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ள புதிய கல்வியாண்டில் இருந்து 3 முதல் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம், புதிய பாட புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிடுகிறது.
இதற்கான பணி நடந்து வருவதாகவும், விரைவில் புதிய புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும் என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது. இதுதவிர பிற வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய புத்தகங்களே தொடரும். புதிய தேசியக் கல்விக் கொள்கையில் திட்டமிட்டுள்ளபடி புதிய பாடத்திட்டங்கள் இருக்கும். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதற்கான பயிற்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.