சவூதி அரேபிய அருகே ஈரான் கடற்கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டதில் குமரி மீனவரின் பார்வை பறிபோனது..!!
சவூதி அரேபிய அருகே ஈரான் கடற்கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டதில் குமரி மாவட்ட மீனவரின் பார்வை பறிபோனது. கண்பறிபோனதை அடுத்து மீனவர் ராஜேஷ்குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சவூதி அரேபியாவில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சவூதியில் 5,000க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமுற்ற மீனவர் ராஜேஷ்குமார் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்துறையைச் சேர்ந்தவர். மீனவர் மீதான தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமர மாவட்ட ஆட்சியரிடம் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு மனு அளித்துள்ளது. சவுதி அரேபியாவில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர் ஒருவர் கடற்கொள்ளையர்களால் சுடப்பட்டு பார்வை பறிபோன சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.