IPL 2023 | ஆர்சிபியும்.. இறுதிகட்ட பதற்றமும்

IPL 2023 | ஆர்சிபியும்.. இறுதிகட்ட பதற்றமும்
IPL 2023 | ஆர்சிபியும்.. இறுதிகட்ட பதற்றமும்

பேட்டிங்கில் நட்சத்திர வீரர்களும், அதிரடி வீரர்களும் பலர் இருந்தாலும் 15 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்து 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ரஜத் பட்டிதாரின் அதிரடி சதத்தால் வீழ்த்தினாலும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் வீழ்ந்தது இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து 4-வது இடத்துடன் வெளியேறியது பெங்களூரு அணி. முதன்முறையாக கோப்பையை கைகளில் ஏந்திவிட வேண்டும் என்ற பேராவலுடன் டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் 2வது முறையாக களமிறங்குகிறது ஆர்சிபி.

இந்த வருடம் புதிது என்ன?: பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இங்கிலாந்தின் இடது கைவேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லேவை ரூ.1.90 கோடிக்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அவினாஷ் சிங் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

விராட் கோலி பார்ம்…: ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற விபத்து ஒன்றில் காலில் படுகாயம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் வரை, அவர் கிரிக்கெட்விளையாடுவதற்கான உடற்குதியை எட்டவில்லை. இந்நிலையில் தற்போது முழு உடற்தகுதியுடன் களத்துக்கு திரும்ப தயாராகி உள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி பார்முக்கு திரும்பி உள்ளதும் கவனம் பெற்றுள்ளது. ஆயிரம் நாட்களுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் தவித்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில்186 ரன்கள் விளாசி இழந்த பார்மை மீட்டெடுத்தார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு அவர், அடித்த இந்த சதம்சிறப்பு வாய்ந்ததாக அமைந்திருந்தது. மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் சிறந்த வடிவில் இருப்பது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு பெரிய அளவில் ஊக்கம் கொடுக்கக்கூடும்.

காயங்கள்…: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தசைநார் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்களில் அவர், கலந்துகொள்ளவில்லை.

காயத்தில் இருந்து ஹேசில்வுட் முழுமையாக குணம் அடையாததால் ஐபிஎல் தொடர்முழுவதும் பங்கேற்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. ஏனெனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் ஜோஷ் ஹேசில்வுட் கவனம் செலுத்தக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க அதிரடி பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதர், குதிகாலில் ஏற்பட்டுள்ள காயத்துக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைக்கு ரஜத் பட்டிதர், தொடக்க ஆட்டங்களில் பங்கேற்க முடியாது. மருத்துவர்கள் அவரை, 3 வார காலம் ஓய்வில் இருக்க அறிவுரை வழங்கி உள்ளனர். இதன் பின்னர் அவருக்கு எடுக்கப்படும் எம்ஆர்ஐ ஸ்கேனின் முடிவை பொறுத்தே தொடரின் பிற்பாதியில் விளையாட முடியுமா? என்பது தெரியவரும்.

உள்ளே வெளியே…: கிளென் மேக்ஸ்வெலுக்கு மாற்றாக கருதப்பட்ட வில் ஜேக்ஸ் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக நியூஸிலாந்தின் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கைகொடுப்பாரா ரீஸ் டாப்லே?: ஜோஷ் ஹேசில்வுட் களமிறங்குவது சந்தேகமாக உள்ள நிலையில் அவரது இடத்தில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சார் ரீஸ் டாப்லே களமிறக்கப்படக்கூடும். இந்திய வீரர்களில் அனுபவம் வாய்ந்த ஹர்ஷல் படேல், மொகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்க்கக்கூடும்.

6 ஆட்டங்கள் சாதகமாகுமா?: கர்நாடகாவில் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் பெங்களூரு அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடக்கூடிய 7 ஆட்டங்களில் 6-ஐ ஏப்ரல் மாதத்திலேயே விளையாட உள்ளது. எப்போதும் பெங்களூரு அணி லீக் சுற்றின் 2-வது பாதியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கிடையாது. இதனால் சொந்த மைதான போட்டிகளில் கணிசமான வெற்றிகளை குவிப்பதில் அந்த அணி தீவிரம் காட்டக்கூடும்.

ஏனெனில் பெங்களூரு அணி லீக் சுற்றின் இறுதிப்பகுதியில் தடுமாறுவது வாடிக்கையாக உள்ளது. 2020-ம் ஆண்டு அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்
சியாக தோல்வி அடைந்திருந்தது. 2021-ம் ஆண்டு லீக் சுற்றின் 2வது பாதியின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வீழ்ந்திருந்தது. கடைசியாக 2022-ம் ஆண்டு 2வது பாதியில் 7 ஆட்டங்களில் பெங்களூரு அணியால் 3-ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இம்முறை தொடகத்திலேயே 6 ஆட்டங்களை தனது சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி விளையாட உள்ளதால் ஒருவகையான நெருக்கடியை சந்திக்கக்கூடும் என தெரிகிறது.

பெங்களூரு படை: டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், மொகமது சிராஜ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, ரஜத் பட்டிதர், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மகிபால் லாம்ரோர், ஃபின் ஆலன், சுயாஷ் பிரபுதேசாய், கரண் சர்மா, சித்தார்த் கவுல், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லே, ஹிமான்ஷு சர்மா, மனோஜ் பந்தகே, ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ், மைக்கேல் பிரேஸ்வெல்.