சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு!!
பாஸ்ட் டேக் திட்டத்தை அமல்படுத்துவது டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் மாற்றுவதே FASTag முறையாகும். இதனை பெற வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கிகளைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து FASTag ஸ்டிக்கரை பெற்ற பிறகு Google Play மூலம் FASTag செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் செல்லும் வாகனங்கள் கட்டாயம் பாஸ்ட்டேக் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. எலக்ட்ரானிக் சாதனமான பாஸ்ட்டேகை வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தினால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருக்காமல் கடந்து செல்ல முடியும்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், சுங்கச்சாவடிகளில் காலவிரயத்தை தவிர்க்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி இதனை பெற்றுக் கொள்ளலாம். கடந்த புதன்கிழமை நிலவரப்படி 70 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட் டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்த கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை அடுத்து, டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.