முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்த நாள் இனி மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்

முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்த நாள் இனி மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இனி, மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கி தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசிய முதல்வர் பழனிசாமி,

''1) அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்துக் கொள்ள இத்தொகை ஏதுவாக அமையும்.

2) பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர்,அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால், அரசு தாய் தந்தை நிலையிலிருந்து அவர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும். இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்.

3) தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.

4) பெண் சிசு கொலைகளை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டத்தினை நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில், பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. அதனைகருத்திற்கொண்டு, குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.