அந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

அந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

அந்தமானில் திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

விழாவில் கலந்து கொண்டு மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், ஆயிரம் கடல் மைல் கடந்து, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க வந்திருக்கிறேன். ஏற்கனவே 2013ஆம் ஆண்டு இதே அந்தமானில், இதே கலைஞர் அறிவாலயத்தில், நம்மை ஆளாக்கி வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் உறங்கிக் கொண்டிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் சிலையை நான் திறந்து வைத்திருக்கிறேன். இன்று கலைஞர் மகனாக வந்து அவருடைய சிலையைத் திறந்து வைத்துள்ளேன். 

1,191 கடல் மைல் தொலைவு கடந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், உறவால், உணர்வால், ரத்தத்தால், ஒரு தாய் மக்கள் என்ற அந்த உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 

அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ஆம் ஆண்டு வடசென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைத்த நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னார்; ‘ஒருதாய் வயிறு தாங்காது என்ற காரணத்தால், தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த தம்பி மார்களே, உடன்பிறப்புகளே’ என்று அண்ணா அவர்கள் அழைத்தார்கள். அந்தத் தாய்க்கு அண்ணா என்று பெயர்; அந்தத் தாய்க்கு கலைஞர் என்று பெயர்.

கடல் கடந்து வாழ்ந்தாலும், நீங்கள் தமிழ்நாட்டு மக்களுடன் சேர்ந்து, வாழ்வது போல்தான் உங்களைக் காண்கிறேன். அந்தமானில் கலைஞர் அவர்களின் சிலை திறக்கப்படுவது, கலைருக்குக் கிடைத்திருக்கும் பெருமை அல்ல; அந்தமானுக்கே கிடைத்திருக்கும் பெருமையாகத்தான் நீங்கள் கருதவேண்டும்.

மன்னன் ராஜேந்திர சோழன் கடல்துறை அமைத்த ஊர் அந்தமான்தான். இந்திய தேசத்திற்காகப் போராடிய பலநூறு தியாகிகளைச் சிறைச்சாலையைத் தவச் சாலையாக மாற்றிய ஊரும் இந்த அந்தமான்தான். 

1943ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து கைப்பற்றியது ஜப்பான். மறந்திருக்க மாட்டீர்கள். அப்போது இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசிடம்தான்  அந்தமானை ஜப்பான் நாடு ஒப்படைத்தது. 1943 முதல் 1945 வரை 2 வருடம் இந்திய தேசிய ராணுவத்தின் மூலமாக நேதாஜியால் ஆளப்பட்டது, இந்த அந்தமான். இந்தியாவில் முதல் சுதந்திரப் போரைத் தொடங்கியதும்  இந்த அந்தமான்தான். முதல் சுதந்திரக் காற்று வீசியதும் இந்த அந்தமானில் இருந்துதான். 

தமிழர்களுக்காக, தமிழினத்திற்காக, தமிழ் மொழிக்காக என்றைக்கும் தி.மு.க. குரல் கொடுக்க காத்திருக்கிறது. ஆகவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று - வெற்றி விழா நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நானே தேடி வருவேன் - அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் எனப் பேசினார்.