கிண்டி கத்திப்பாரா பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்

கிண்டி கத்திப்பாரா பாலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
road roko in chennai kathipara bridge to support farmers

சென்னை: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், சில நாட்களுக்கு முன்னர் நிர்வாணப் போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சென்னையின் முக்கிய பாலமாக கருதப்பட்டும் கிண்டி கத்திப்பாரா பாலத்தில் இயக்குநர் கெளதம் தலைமையிலான இளைஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலத்தின் இருபுறமும் சங்கிலியினால் மறித்து, அந்த சங்கிலிக்கு பூட்டு போட்டு இந்த சாலை மறியல் நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் கிண்டி, சைதாபேட்டை, அண்ணா சாலை, விமான நிலையம், கோயம்பேடு போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முன் அறிவிப்பு ஏதுமின்றி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என போராட்டக்காரர்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர், ஆனால் போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்ததால் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர், திடீரென நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் போக்குவரத்து சுமார் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

road roko in chennai kathipara bridge to support farmers