சுங்கச்சாவடிகளில் வேகத்தடை அகற்றம்- நெடுஞ்சாலைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

சுங்கச்சாவடிகளில் வேகத்தடை அகற்றம்- நெடுஞ்சாலைத்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது

பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதால் சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் வேகமாக பயணம் செய்ய ஏதுவாக வேகத்தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கவும், வாகனங்கள் திருட்டு, சட்டவிரோதமாக பொருட்களை கடத்திச் செல்லுதல் போன்ற சம்பவங்களை தடுக்கவும் பாஸ்டேக் (FASTag - மின்னணு கட்டணம்) முறையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த கட்டண முறையை கட்டாயமாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா 2 பாதைகளில் பணம் கொடுத்து பயணம் செய்யலாம்.

இந்த சலுகை வரும் ஜனவரி 14-ம்தேதி வரை அளிக்கப்படும் என தேசியநெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. இருப்பினும், சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்கி கெடுபிடி செய்வதால், நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதேபோல், பாஸ்டேக் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனினும் பாஸ்டேக் முறையை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதால் சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் வேகமாக பயணம் செய்ய ஏதுவாக வேகத்தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஸ்டேக் பாதை வழியாக வாகனங்கள் செல்ல ஏதுவாக வேகத்தடைகள், தடுப்புகள், அடையாள மின் தடுப்புகள் உள்ளிட்டவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வாகனங்கள் சிரமமின்றி அதேசமயம் வேகமாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.