உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கம்பாளா பந்தயப் போட்டியாளர்

உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கம்பாளா பந்தயப் போட்டியாளர்

கர்நாடக மாநிலம், தட்சின கன்னடத்தில் நடக்கும் கம்பாளா எருமை மாட்டுப் பந்தயத்தில் பங்கேற்ற ஸ்ரீநிவாஸ் கவுடா, தடகள வீரர் உசேன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடிய தகவல் வெளியானதையடுத்து அவருக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று இந்திய விளையாட்டு ஆணையம்(எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தட்சின கன்னடா பகுதியில் ‘கம்பாளா' என்ற பெயரில் பாரம்பரியமிக்க எருமை மாட்டு பந்தயம் நடந்து வருகிறது

தென் கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரி என்ற கிராமத்தில் கம்பாளா போட்டி நேற்று நடந்தது. இதில் 250 ஜோடி எருமை மாடுகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீநிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் தனது எருமை மாடுகளுடன் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்து முதல் பரிசை வென்றார். அவரது வேகத்தை உசேன் போல்ட்டுடன் சிலர் வேடிக்கையாக ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். இதில், உசேன் போல்ட்டை விட ஸ்ரீநிவாஸ் கவுடா வேகமாக ஓடியது தெரியவந்தது.

142.50 மீட்டரை 13.62 வினாடிகளில் ஸ்ரீநிவாஸ் கவுடா கடந்திருக்கிறார் என்றால், 100 மீட்டரை அவர் 9.55 வினாடிகளில் கடந்திருக்கிறார். ஒலிம்பிக்கில் 100 மீட்டரை கடக்க ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் 9.58 வினாடிகள் எடுத்துக் கொண்டார். அப்படிப் பார்க்கும்போது, அவரது சாதனையை ஸ்ரீநிவாஸ் கவுடா முறியடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இதையடுத்து இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், "கம்பாளா பந்தயத்தில் ஓடிய இளைஞருக்கு முறையான பயிற்சி அளித்தால் 100 மீட்டர் ஓட்டத்தில் சிறந்த வீரராக வருவார். கம்பாளாவை ஒலிம்பிக் போட்டியிலும் சேர்க்க முயற்சிக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.