வெளிநாட்டுப் பணம் விவகாரம்; திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த ஆர்.பி.ஐ

வெளிநாட்டுப் பணம் விவகாரம்; திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த ஆர்.பி.ஐ
வெளிநாட்டுப் பணம் விவகாரம்; திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த ஆர்.பி.ஐ

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்த சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வகையான வெளிநாட்டு பணத்தை தேவஸ்தான நிர்வாகம் வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவையான அனுமதியை ரிசர்வ் வங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இந்திய பணம் மட்டுமல்லாது வெளிநாட்டு பணத்தையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உட்பட அறக்கட்டளைகள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு முன் அந்த பணத்தை யார், எப்படி, எப்போது வழங்கினர் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

உரிய விளக்கங்களை பெற்று கொண்ட பின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது அறக்கட்டளை தனக்கு கிடைத்த வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து இந்திய பணமாக மாற்றி கொள்ளலாம். ஆனால் திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பணத்தை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள் பற்றிய விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க இயலாது.

எனவே இன்னார் என்று குறிப்பிட இயலாத பக்தர்கள் மூலம் ஏழுமலையானுக்கு இந்த பணம் காணிக்கையாக கிடைத்தது என்று தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்து இருந்தது. இந்த விளக்கத்தை சட்டரீதியாக ஏற்க இயலாத காரணத்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் மூலம் தேவஸ்தானத்திற்கு கிடைத்த வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவையான அனுமதியை மூன்று ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் சரியான விளக்கம் அளிக்காத காரணத்தால் தேவஸ்தானத்திற்கு 3.29 கோடி ரூபாய் அளவிற்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

எனவே தேவஸ்தானத்திடம் தற்போது சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு பணம் குவிந்துள்ளது. இந்த நிலையில் இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, ‘ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டார்.