அருப்புக்கோட்டை வில்லிபத்திரி பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் தேர்தல் ரத்து: விருதுநகரில் காலை 9 மணி வரை 11.19% வாக்குப்பதிவு

அருப்புக்கோட்டை வில்லிபத்திரி பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் தேர்தல் ரத்து: விருதுநகரில் காலை 9 மணி வரை 11.19% வாக்குப்பதிவு

விருதுநகர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களில் சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11.19% வாக்குப்பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1,3,5,6,7,8 ஆகிய வார்டுகளில் நடைபெறவுள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.

இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் தவிர்த்து மற்ற தேர்தல்களான மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகியவற்றிற்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எந்த வித அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு கூடுதலான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது.