பொன் ராதாகிருஷ்ணன் விவகாரம்: பினராயி விஜயன் விளக்கம்

பொன் ராதாகிருஷ்ணன் விவகாரம்: பினராயி விஜயன் விளக்கம்

சபரிமலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனிடம் போலீசார் அவமதித்து விட்டதாக நேற்று கன்னியாகுமரியில் கேரள அரசை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

"சபரிமலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் சரியான முறையில் நடந்து வருகிறார்கள். சபரிமலையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதுதான் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சபரிமலை சென்ற மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கேட்டுக்கொண்டதால் தான் அவருடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவானது. போலீசார் நடந்து கொண்டதில் தவறில்லை.

சபரிமலை செல்லும் உண்மையான பக்தர்களுக்கு போலீசார் எந்த தடையும் விதிக்கவில்லை என்று ஐ.ஜி., கேரள ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கோர்ட்டும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கேரளாவில் உள்ள போலீஸ் அதிகாரிகள், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சபரிமலை பிரச்சனையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது."

இவ்வாறு அவர் கூறினார்.