பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் தோல்வியடைய காரணம் என்ன
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது. இது சென்னை அணியின் 3-வது தோல்வியாகும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து சென்னை அணி கேப்டன் ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜடேஜா, நாங்கள் பவர்-பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். முதல்பந்தில் இருந்தே ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வலுவாக மீண்டு வர நாங்கள் புதிய வழியை கண்டுபிடிக்க வேண்டும்’ என்றார்.
மேலும், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்குவாட் தொடர்ந்து குறைவான ரன்னிலேயே அவுட் ஆவதும், அவரது ஆட்டத்திறமை கவலையளிக்கும் வகையில் உள்ளதா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜடேஜா, கெய்குவாட் மிகச்சிறந்த வீரர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு நாம் உத்வேகம் அளிக்க வேண்டும். அவர் மீண்டும் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்றார்.