இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் புதிய தலைவர்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் புதிய தலைவர்
Vice Chancellor of SRMIST takes charge as President of AIU

புதுடெல்லியிலுள்ள இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 97-ஆவது தலைவராக SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் சந்தீப் சஞ்செட்டி பொறுப்பேற்றார். இந்தச் சங்கம் 1925ல் நிறுவப்பட்டதாகும். இதனுடைய தொடக்கப் பெயர் இந்தியப் பல்கலைக்கழங்களுக்கிடையிலான வாரியம் என்று இருந்தது. இப்பொழுது இந்தச் சங்கத்தில் 720 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் துணைவேந்தர்கள் ஆவார்கள். இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களினுடைய பிரதிநிதிகள் உள்ள இந்தச் சங்கம் பல்கலைக்கழகங்களுக்கிடையே ஒத்துழைப்பையும் ஒன்றுக்கொன்று கலந்தாய்வையும் அளிக்கிறது. மேலும், இந்திய அரசிடமும் மாநில அரசுகளிடமும் இது ஒரு தொடர்புப் பணியை மேற்கொள்கிறது. கல்வித் திறனை மேம்படுத்துவதுடன் இந்தச் சங்கம் தேசிய அளவிலும் உலகளவிலும் உயர்கல்வித் துறையில் கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது.

நிறுவனங்களின் வழிகாட்டி என்று பெயர்பெற்றுள்ள பேராசிரியர் சஞ்செட்டி SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தராகச் சேர்வதற்கு முன்னால் ஜெய்பூர் மணிப்பால் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் டில்லி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநராகவும் சூரத்கல் என்.ஐ.டி.கே. இயக்குநராகவும் திருச்சிராப்பள்ளி, கொல்கத்தா என்.ஐ.டி.களின் பொறுப்பு இயக்குநராகவும் டெல்லி திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புப் பள்ளியின் இயக்குநராகவும் புதியதாக நிறுவப்பட்டுள்ள கோவா என்.ஐ.டி., புதுச்சேரி என்.ஐ.டி., மற்றும் சிக்கிம் என்.ஐ.டி., ஆகியவற்றின் வழிகாட்டி இயக்குநராகவும் செயற்பட்டிருக்கிறார்.

Vice Chancellor of SRMIST takes charge as President of AIU