பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்? இன்று முக்கிய முடிவு

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்? இன்று முக்கிய முடிவு

சேலம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், காலவரையற்ற போராட்டத்தில் இறங்குவது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்கு முறையை அரசு கையாண்டு வருகிறது. இன்று முதல் தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் போராட்டம் மேலும் தீவிரம் அடையும்.

போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ. 8 ஆயிரம் கோடியை வேறு செலவுக்கு அரசு எடுத்து கொண்டது. இதே போல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை.

அரசு ஊழியர்களை போல போக்குவரத்து கழகத்தில் 76 ஆயிரத்து 600 பேர் புதிய பென்சன் திட்டத்தில் பணியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவில் 21 மாதம் நிலுவை பாக்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் 14 மாத நிலுவை உள்ளது.

240 நாட்கள் பணி முடித்ததும் போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆனால் 12 ஆயிரத்து 611 பேர் 1700 நாட்கள் பணி முடித்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் எங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒரே பிரச்சனை என்பதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

முதலில் ஜாக்டோ-ஜியோ மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம், அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சென்னையில் இன்று மாலை நடைபெறும் அவசர கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 10 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 90 சதவீத பேர் போராட்டத்தில் இறங்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.