போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

திருச்சி: தஞ்சை மாவட்டம் சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி உஷா (36) இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாது இருந்த உஷா 3 மாதங்களுக்கு முன் கர்ப்பம் அடைந்தார்.
நேற்று இரவு ராஜா தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
இரவு 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டார்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறிவிட்டு காமராஜ் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவரை மற்றொரு போலீஸ்காரருடன் விரட்டி சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது. இதனால் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தப்போக்கும் அதிகமாகி நடுரோட்டில் உயிருக்கு போராடினார். உடனடியாக உஷாவை துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு பொது மக்கள் தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அங்குள்ள பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பிற்கு காரணமாக இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 304(2) (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தாக்குதல்), 336 (பலத்த காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைதான காமராஜ் இன்று காலை நீதிபதி ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 21-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் காமராஜை சஸ்பெண்டு செய்து திருச்சி மத்திய மண்டல காவல் துறை ஐ.ஜி. வரதராஜூ இன்று காலை உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதை உஷாவின் உறவினர்கள் ஏற்கவில்லை. சஸ்பெண்டு என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சமரசம் செய்யும் முயற்சியே தவிர, கர்ப்பிணி பெண் உயிரிழப்பிற்கு காரணமான காமராஜூக்கு தண்டனை வாங்கித்தரும் நடவடிக்கை இல்லை.
நேற்று வரை விபத்து வழக்காகவே இந்த மரணத்தை சித்தரித்த போலீசார் உஷா மற்றும் அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.